இஸ்ரோ தலைவர் சிவன் பிரதமர் மோடியிடம் கண்ணீர் விட்டு அழுத போது பிரதமர் மோடி கட்டிப்பிடித்து அவரை தேற்றி ஆறுதல் கூறினார்.
சந்திரயான் 2 திட்டத்தின்படி இன்று அதிகாலை விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பணி தொடங்கப்பட்டது. நிலவின் தென் துருவ பகுதியில் எந்த ஒரு நாடும் இதுவரை லேண்டரை தரையிறக்கியதில்லை என்பதால் இந்த அரிய நிகழ்வை காண நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் தொலைக்காட்சியில் பார்க்க காத்திருந்தனர். பிரதமர் மோடி பெங்களூரு இஸ்ரோ மையத்திற்கு ஆர்வமுடன் இதனை காண வந்திருந்தார்.
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்களும், பூடானை சேர்ந்த மாணவர்களும் அங்கு எதிர்பார்ப்புடன் திரண்டிருந்தனர். அதன் பின் விக்ரம் லேண்டர் தரையிறங்க தொடங்கியது. ஆனால் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 கிமீ தூரத்தில் இருக்கும் போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. லேண்டரில் இருந்து சமிக்ஞைக்காக (signal) இஸ்ரோ விஞ்ஞானிகள் காத்திருந்தனர். ஆனால் சிக்னல் கிடைக்காததால் இஸ்ரோ மையமே நிசப்தமானது.
அதன்பின் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 கிமீ தூரத்தில் இருக்கும்போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. லேண்டரில் இருந்து கட்டுபாட்டு அறைக்கு சிக்னல் வரவில்லை. இந்த தரவுகளை ஆராய்ந்து வருகிறோம் என்று தெரிவித்தார். பிரதமர் மோடி எதிர்வரும் விண்வெளி திட்டங்களில் விஞ்ஞானிகள் சாதிப்பார்கள் என்று நம்பிக்கையூட்டினார்.
இதையடுத்து இன்று காலை 8 மணிக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி நம்பிக்கையாகவும், ஆறுதலாகவும், ஊக்கப்படுத்தும் வகையிலும் பேசினார். பின்னர் அங்கிருந்து பிரதமர் மோடி கிளம்பும்போது இஸ்ரோ தலைவர் சிவன் பிரதமர் மோடியிடம் கண்ணீர் விட்டு அழுதார். அப்போது பிரதமர் மோடி கட்டிப்பிடித்து அவரை தேற்றி ஆறுதல் கூறினார். இதனை கண்ட அங்கிருந்த சிலரும் கண் கலங்கினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
What a moment! What a gesture! @PMOIndia @narendramodi @isro #KSivan #Chandrayan2 https://t.co/JNj35MYnPB
— Daniel Carmon?? (@danielocarmon) September 7, 2019