பங்குனி உத்திரம் என்றால் என்ன…? இந்த நாளில் என்னென்ன சிறப்புகள்…? இதோ தெரிஞ்சிக்கலாம் வாங்க..!!

பங்குனி உத்திரம் என்பது முருகனுக்கு உரிய சிறப்பு விரத தினமாக கொண்டாடப்படுகிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும். தமிழ் மாதங்களில் 12ஆம் மாதம் பங்குனி, நட்சத்திரங்களில் 12ஆம் நட்சத்திரம் உத்திரம், எனவே 12 கையுடைய வேலனுக்கு சிறப்பான தினமாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் கோவில்களில் வாராந்திர திருவிழாக்களும் நடைபெறும். சிவனுக்கும், பார்வதிக்கும் சோமசுந்தரம் என்றும் மீனாட்சி என்றும் நாமம் கொடுத்து திருமணம் செய்து வைத்த நாளும் பங்குனி உத்திர நாளாகும்.

சிவனின் மோன நிலையை கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக சிவன் தேவியை இந்த தினத்தில் மணந்தார் என்பது ஐதீகம். பங்குனி உத்தர கல்யாண திருவிழா பசுவாகிய ஆன்மா பதியாகிய சிவத்துடன் இணைவதாக ஒரு உயர்ந்த நிலையினை எடுத்துக்காட்டுகின்றது. இந்த தினத்தில் அம்மையப்பனை கசைவர்கள் விரதம் இருந்து வழிபடுவார்கள். இந்நாளில் பார்வதியை பரமேஸ்வரன் மணந்தார்.

ராமன் சீதையை மணந்தார் முருகன் தெய்வானையை கரம்பிடித்தார். திருவரங்கநாதர் ஸ்ரீ ஆண்டாள் முதலிய தெய்வ திருமணங்கள் பலவும் இந்த நாளில் தான் நடைபெற்றன. இதனால் பங்குனி உத்திர விரதம் திருமண விரதம் என்றும் கல்யாண விரதம் என்றும் போற்றப்படுகிறது. இந்த தினத்தில் இளைஞர்களும் கன்னிகளும் சிவனையும் முருகனையும் திருமண கோலத்தில் வணங்கி வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என்று ஐதீகம்.