தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று நடைபெறுகிறது. 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
கடந்த வெள்ளியன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் சட்டப்பேரவையில் கொரோனா வைரஸ் நடவடிக்கை குறித்து திமுக தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது இதற்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா வைரஸ் தொடர்பாக சட்டமன்றத்தில் பயமோ, அச்சமோ வேண்டாம், அரசு உங்களை முழுமையாக காப்பாற்றும் என கூறியுள்ளார்.
முதல்வர் தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்றுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ரூ. 60 கோடி உடனடியாக விடுக்கப்பட்டுள்ளது. 16 மாவட்டங்களில் வணிக வளாகங்கள், தியேட்டர்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக மக்களை பதற்றப்படுத்தவில்லை. உலக சுகாதார நிறுவனம், மத்திய அரசின் அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றி வருகிறோம் என்றும் கொரோனா தொடர்பாக மக்கள் பதற்றமோ, பீதியோ அடையத் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.