எங்களுக்கும் அனுமதி வேண்டும்… வாழ்வாதாரத்தை இழக்கும் தொழிலாளர்கள்… சி.ஐ.டி.யூ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!

தேனி மாவட்டத்தில் சி.ஐ.டி.யூ சங்கம் சார்பில் தொழிலாளர்கள் நலன் குறித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

தேனி மாவட்டத்திலிருந்து கேரளா இடுக்கியில் உள்ள ஏலக்காய் தோட்டத்திற்கு கம்பம், போடி, உத்தமபாளையம், சின்னமனூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து பல்வேறு தொழிலாளர்கள் வேலக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் தற்போது கொரோனாவின் தாக்கம் இருந்து வருவதால் ஏலக்காய் தோட்டத்திற்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கொரோனா தடுப்பூசி 2 டோஸ்களும் செலுத்தப்பட்ட சான்றிதழ் இருந்தால் மட்டுமே கேரள எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் ஏலக்காய் தொழிலாளர்களும் அவர்களை அழைத்து செல்லும் ஜீப் ஓட்டுநர்களும் வாழ்வாதாரத்தை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள், ஜீப் டிரைவர்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து உத்தமபாளையம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்து பைபாஸ் சாலை வழியாக தாலுகா அலுவலகம் வரை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக நடந்து சென்றுள்ளனர்.

மேலும் தோட்டத்திற்கு வேலைக்கு செல்பர்களை தமிழக-கேரள எல்லையில் வாகனத்தில் குறைந்த ஆட்களை ஏற்றி செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதனையடுத்து கொரோனா பெருந்தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக 7,500 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து தாசில்தார் உதயராணியிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துவிட்டு ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு சென்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *