“உடைந்து விழுந்த மின்கம்பம்”… பரபரப்பான உண்மைகள்…. புட்டு புட்டு வைத்த அன்புமணி….!!!

தமிழகம் முழுவதும் மின் கம்பங்களை தர ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவரான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இது தொடர்பாக டாக்டர் அன்புமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் நட்ட புதிய மின்கம்பமானது உடைந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த காளிராஜ் இறந்தது கவலைக்குரியதாக இருக்கிறது. இதுகுறித்து விசாரித்தபோது சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் திருப்பதி நகரில் புதிய மின்சாரக் கம்பத்தை நட்டனர். இந்நிலையில் மின்சாரக் கம்பிகளை பொறுத்தும் வேலையில் காளிராஜ் ஈடுபட்டிருந்தார். அப்போது மின்கம்பம் உடைந்து விழுந்ததால் காளிராஜ் சாலையில் அடிபட்டு இறந்தார். இந்த விபத்தின்போது காளிராஜுக்கு உதவியாக வேலை பார்த்த முருகேசன் என்ற பணியாளரின் கை முறிந்து சிவகாசி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து டுவிட்டரில் நான் பதிவிட்டேன். அதில் மின் கம்பங்களின் தரம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அதுமட்டுமின்றி இந்த சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்காக பாமக பொருளாளர் திலகபாமா தலைமையில் குழு ஒன்று அனுப்பப்பட்டு இருந்தது. இதனையடுத்து அக்குழுவினர் நடத்திய விசாரணையில் மின் கம்பம் உடைந்து விழுந்த விபத்தில் காளிராஜ் இறந்து 1 மணி நேரத்துக்கு பின்புதான் மின்சாரத்துறை அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர். அதன்பின் காளிராஜ் உடல் ஆய்வுக்குப் பிறகு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையில் காளிராஜ் குடும்பத்திற்கு அரசு சார்பாக யாரும் ஆறுதல் கூறவில்லை. இறுதிச் சடங்குக்காக அரசு சார்பாக 25,000 ரூபாய் வழங்கியதை தவிர்த்து வேறு எந்த உதவியும் இதுவரையிலும்  அறிவிக்கப்படவில்லை.

இவ்வாறு விபத்தில் இறந்த காளிராஜ் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தில் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த பல வருடங்களாக அவர் மின் வாரியத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் காளிராஜ் பணி நிலைப்பு செய்யப்பட்டார். இதற்கு பின்புதான் அவரது குடும்பம் பொருளாதார ரீதியாக முன்னேற்றங்களைச் சந்திக்க எதிர்பார்த்திருந்தது. ஆனால் காளிராஜின் இறப்பானது அனைத்து நம்பிக்கைகளையும் உடைத்து விட்டது. எங்கோ நடைபெற்ற ஊழல் மற்றும் மின்கம்பத்தை தயாரிப்பதற்கான தரத்தில் செய்யப்பட்ட சமரசம் தான் காளிராஜின் மறைவுக்கு காரணமாகும். இதனால் அவரது இறப்பை வழக்கம்போல் கருதி ஓரிரு லட்சம் கொடுப்பதுடன் அரசு ஒதுங்கிவிடக் கூடாது.

காளிராஜ் இறக்காமல் இருந்தால் இன்னும் 33 வருடங்கள் வேலை பார்த்து இருப்பார். அதனை கருத்தில்கொண்டு அவருடைய குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். இப்போது காளிராஜுக்கு ஏற்பட்ட விபத்து எப்போது வேண்டுமானாலும் மற்ற பணியாளர்களுக்கு ஏற்படலாம் என்ற சூழ்நிலை நிலவுகிறது. எனவே மின்சாரக் கம்பங்கள் அந்த அளவுக்கு தரம் இன்றி இருக்கிறது. இவ்வாறு  உடைந்து விழுந்த மின்கம்பம் எந்த அளவுக்கு தரமற்றவையாக உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும். இதேபோன்று தென்காசி, திருவில்லிபுத்தூர் என பல இடங்களில் மின்கம்பங்கள் உடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இத்தகைய மின்கம்பங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் எந்நேரமும் விபத்துக்கு ஆளாக நேரிடும்.

இதற்கிடையில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டபின் மின்கம்பம் உடைந்தால் பலபேர் உயிரிழக்க நேரிடும். இதுபோன்ற ஆபத்துகளைத் தவிர்க்க சிவகாசியில் உடைந்த மின்கம்பத்தை தயாரித்தவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட மின்கம்பங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் அண்மைக் காலங்களில் உருவாக்கப்பட்ட மின்கம்பங்களை தர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அப்போது தரமற்ற மின் கம்பங்களை தயாரித்த நிறுவனங்கள் எது என்றும் அவற்றை கொள்முதல் செய்ய அனுமதித்தவர்கள் யார் என்றும் விசாரணை நடத்த ஆணையிட வேண்டும். அதன் பிறகுதான் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை வேண்டும்” என டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *