திமுகவில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.துரைசாமி பாஜகவில் இணைந்தார்!!

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.துரைசாமி இன்று காலை 10 மணிக்கு பாரதிய ஜனதாவில் இணைந்தார். மேலும் திமுகவில் இருந்து விலகிக்கொள்வதாக தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளதாக வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் வி.பி.துரைசாமி. இவர் எம்.எல்.ஏ, எம்.பி, துணை சபாநாயகர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர். திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்து வந்த வி.பி.துரைசாமி கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவர். கடந்த திங்கட்கிழமை அன்று பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு தன் மகனுடன் துரைசாமி சென்றார்.

அங்கு அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விளக்கம் அளித்த துரைசாமி, பாஜகவில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு மாநிலத் தலைவர் பதவி கொடுத்தது இதுவே முதல்முறை. அவர் என் இனத்தார், உறவினர் என்ற முறையில் வாழ்த்து தெரிவிக்கத் தான் சென்றேன். இந்த சூழலில் திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து துரைசாமி அதிரடியாக விடுவிக்கப்பட்டார்.

அவருக்கு பதிலாக அந்தியூர் செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தான் நீக்கப்பட்டது குறித்து பேசிய அவர், ” திமுக தோற்றுவிக்கப்பட்ட நோக்கத்தில் இருந்து பிறழும் போது நான் கட்சி மாறுவதில் தவறில்லை என்றும் திமுகவில் சாதிய பாகுபாடு பார்க்கப்படுகிறது என தெரிவித்தார். இந்த நிலையில் இன்று பாஜக கட்சியில் அவர் இணைந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *