விசாரணைக்கு சென்று வந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்…!!

காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு சென்று வந்த இளைஞர் உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கேகே நகர் பகுதியை சேர்ந்தவர் சூர்யா(20). இவர் கடந்த மாதம் 30ஆம் தேதி தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே வந்த காரை தடுத்து நிறுத்தி காரின் கண்ணாடியை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் காரின் உரிமையாளர் ராஜா சரவணன் புகாரளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் 31ஆம் தேதி சூர்யாவை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது சூர்யாவும் காரின் உரிமையாளரும் சமாதானமாக  செல்வதாக உறுதியளித்தனர்.

இதனையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதியாமல் சூர்யாவை  விசாரணையை முடித்துவிட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் விசாரணை முடிந்து வீட்டிற்கு வந்த சூர்யாவுக்கு  திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால்  அவரது உறவினர்கள் வீட்டின் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். தொடர்ந்து  அவரது உடல்நிலை மோசமடைந்ததால் நேற்று கேகே நகரில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சூர்யாவுக்கு  சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சூர்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் திடீரென ராயப்பேட்டை மருத்துவமனை வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று துன்புறுத்தியதால்தான் சூர்யா உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டினர். இதன் காரணமாக சூரியாவின் உடல் பிரேதபரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *