நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டதும் வினய் சர்மா கதறி அழுதுள்ளார்.
டெல்லியை சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டு, சாலையில் வீசப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்தனர். குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்களில் ஒருவன் சிறுவன் என்பதால் 3 ஆண்டுகள் சிறை பிறகு விடுதலை செய்யப்பட்டான்.
மீதம் இருந்த 5 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ராம்சிங்க் என்ற குற்றவாளி சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். எஞ்சிய நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று அதிகாலை 5.30 மணிக்கு திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக தூக்கு தண்டனையை பல முறை காலதாமதப்படுத்திய இவர்களால் இந்த முறை தண்டனையை காலதாமதம் செய்ய முடியவில்லை. மரண பயத்தில் இருந்து வந்த இவர்கள் தூக்கு உறுதி என்று தெரிந்ததும் செய்வதறியாது மிரண்டுள்ளனர். இது குறித்து திஹார் சிறை அதிகாரி கூறியதாவது ,
குற்றவாளிகள் முகேஷ் & வினய் இரவு உணவு சாப்பிட்டனர். அக்ஷய் நேற்று இரவு தேநீர் மட்டுமே சாப்பிட்டார். வினய் சற்று அழுதார். குற்றவாளிகளும் அமைதியாக இருந்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் கண்காணிக்கப்பட்டனர். அவர்களது குடும்பங்கள் கொலையாளிகளின் உடல்களைக் கோரினால் அவர்களிடம் ஒப்படைக்கப்படும். இல்லையென்றால் தகனம் செய்வது எங்கள் கடமை என்று தெரிவித்தார்.