நிலவுக்கு அருகே தொலைத்தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டறியப்பட்டது என இஸ்ரோ தலைவர் சிவன் இன்று தெரிவித்தார்.
பூமியிலிருந்து கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டது. திட்டமிட்டபடி பூமியின் வட்டப்பாதையிலிருந்து சந்திரயான் 2 விண்கலம், ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி நிலவின் பாதைக்கு திருப்பி விடப்பட்டது. அதைத் தொடர்ந்து சந்திராயன்- 2 விண்கலத்தின் வேகம் நிலவின் வட்டப்பாதையில் இருந்து படிப்படியாக குறைக்கப்பட்டது. அதன்பின் ஆகஸ்ட் 2-ம் தேதி ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் லேண்டர் பிரிக்கப்பட்டது.

நேற்று அதிகாலை விக்ரம் லேண்டர் நிலவை நோக்கி தரையிறங்கியது. லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 கிமீ தூரத்தில் இருக்கும்போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. லேண்டரில் இருந்து சமிக்ஞைக்காக (signal) இஸ்ரோ விஞ்ஞானிகள் காத்திருந்தனர். ஆனால் சிக்னல் கிடைக்காததால் இஸ்ரோ மையமே நிசப்தமானது. இஸ்ரோ தலைவர் சிவன் தழுதழுத்த குரலில் சிக்னல் கிடைக்கவில்லை என அறிவித்தார்.
இதையடுத்து விக்ரம் லேண்டர் சிக்னலை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்து அடுத்த 14 நாட்களுக்கு மேற்கொள்ளப்போவதாகவும், அதில் வெற்றி கிடைத்தால் நிலவிலிருந்து பல தகவல்கள் கிடைக்கும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நிலவுக்கு அருகே தொலைத்தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டறியப்பட்டது என இஸ்ரோ தலைவர் சிவன் இன்று தெரிவித்தார். நிலவைச் சுற்றிவரும் விக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் படம் எடுத்து அனுப்பியுள்ளது என்றார். விக்ரம் லேண்டர் கண்டறியப்பட்ட போதிலும் தகவல் தொடர்பு இன்னும் கிடைக்கவில்லை என்றும் தொடர்ந்து முயற்சிக்கிறோம் என்று தெரிவித்தார்.