பெரிய கோவிலை அத்துமீறி வீடியோ எடுத்த ஆளில்லா விமானம்… போலீசார் விசாரணை..!!

தஞ்சை பெரிய கோவிலை ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சையை ஆட்சி செய்த ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தலமாகவும் இருக்கும் பெரிய கோவிலில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த ஆண்டு குடமுழுக்கு திருவிழா நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான வேலைகளில் இந்து சமய அறநிலை துறை ஈடுபட்டுள்ளது.

Image result for தஞ்சை பெரிய கோவில்

கோவில் பிரகாரத்தில் நடைபாதையை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மூலஸ்தான விமான கோபுரத்தை சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்ட பெரிய கோவிலின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவிழா  ஏற்பாடுகள் அந்த வீடியோவில் தெளிவாக பதிவு செய்யப்பட்டதன் மூலம் அது அண்மையில்தான் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

Image result for தஞ்சை பெரிய கோவில்

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக 3 அடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் ஆளில்லா விமானம் மூலம் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இதுபோல் வீடியோ எடுப்பதற்கு மத்திய தொல்லியல் துறை மற்றும் அறநிலையத் துறையின் அனுமதி பெறவேண்டும் என்ற சூழலில் இதற்கு அனுமதி அளித்தது யார் என்ற கேள்வியும் தற்பொழுது எழுந்துள்ளது. இது குறித்து தஞ்சை மாவட்ட காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.