காட்பாடி அருகே விபத்தில் ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி பகுதியை சேர்ந்தவர் ஜீவா(65). இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய உதவி செயற்பொறியாளராக இருந்தார் . இவர் நேற்று முன்தினம் தாமோதரன் என்பவருடன் வேலூர் சென்று விட்டு தனது இரு சக்கர வாகனத்தில் காட்பாடிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது இவர் காங்கேயநல்லூர் சாலையில் வந்தபோது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி இவரது இரு சக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே ஜீவா உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த தாமோதரன் அங்கிருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு காட்பாடியில் இருந்து வேலூர் சென்ற வாகனங்களும் வேலூரில் இருந்து காட்பாடி நோக்கி வந்த வாகனங்களும் நீண்ட வரிசையில் நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜீவானந்தத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்த போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.