வேலூர் மாவட்டத்தின் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, 2022-2023-ஆம் கல்வி ஆண்டில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் மதமாறிய கிறித்துவ ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு மாணவர்களின் வங்கி கணக்கு எண் ஆதாருடன் இணைக்கப்படுவது கட்டாயமாகும்.
மேலும் முந்தைய கல்வி ஆண்டில் இத்திட்டத்தின் மூலம் பெரும்பாலான மாணவர்கள் பயன்பெற்றனர். ஆனால் அவர்கள் வங்கி கணக்குகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமல் இருந்தது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. எனவே அவர்களும் தங்களது ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கு பற்றிய விவரங்களை இணைக்க வேண்டும் எனவும் கணக்கு எண் நடப்பில் செயல்பாட்டில் உள்ளதா என உறுதிசெய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வங்கி கணக்கு செயல்பாட்டில் இல்லாத மாணவர்கள் அஞ்சல்துறையின் மூலம் பூஜ்ஜிய கணக்கு தொடங்க, பள்ளிகளில் சிறப்பு முகாம் நடைப்பெற்று வருவதை அனைத்து மாணவர்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்நிலையில் இந்த பணியினை வருகிற 30-ந் தேதிக்குள் விரைந்து முடிக்குமாறு தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.