வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் நகராட்சி 24-வது வார்டு புவனேஸ்வரி பேட்டை அடுத்த போடிப்பேட்டை வேதாந்த நகர் பகுதியில் தனியார் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அங்கு செல்போன் கோபுரம் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து தற்காலிகமாக பணிகள் நிறுத்தப்பட்டு, பின் மீண்டும் நேற்று இந்த பணிகள் நடைபெற்றது.
இதனையடுத்து அங்கு வந்த மக்கள், 300-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து, இரவையும் பொருட்படுத்தாமல் பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனாலும் நள்ளிரவு வரை தொடர்ந்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் குடியாத்தம் நகரமன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.