“கோர விபத்து” காய்கறி மூட்டை சரிந்து தொழிலாளி மரணம்….. 3 பேர் படுகாயம்….!!

திண்டுக்கல் அருகே காய்கறி மூட்டை சரிந்து தொழிலாளி மரணம் அடைய மூன்று பேர் காயமடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி காய்கறி சந்தையில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி சரக்கு வேன் ஒன்று காய்கறி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. சரக்கு வேனை ஒட்டன்சத்திரத்தை  சேர்ந்த கார்த்திகை வேல் என்பவர் ஓட்ட வேனின் பின்பகுதியில் காய்கறி மூட்டைகளோடு மூட்டை தூக்கும் தொழிலாளிகளான பெருமாள், பூபதி, சண்முகவேல் உள்ளிட்டோர் அமர்ந்து வந்தனர்.

அப்போது பழனி அரசு குடியிருப்பு அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்த வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காய்கறி மூட்டைகள்  தொழிலாளர்கள் மீது சரிய பெருமாள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் டிரைவர் உட்பட 3 பேர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தனர். பின் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவே அதிகாரிகள் காயமடைந்த மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க, பெருமாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.