கொரோனா அச்சுறுத்தல் – இந்தியாவில் விசா நடவடிக்கைகளை நிறுத்தியது அமெரிக்க தூதரகம்!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வரும் 16-ம் தேதி முதல் இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்ல விசா வழங்குவது நிறுத்தப்படுகிறது என்று அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 116 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது.

இந்தியாவை பொருத்தவரை டெல்லி, கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரம் உள்பட 11 மாநிலங்களில் இதுவரை 81 பேருக்கு இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சத்தால் இந்தியாவில் விசா நடவடிக்கைகளை நிறுத்தியது அமெரிக்கத் தூதரகம்.

இதுதொடர்பாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில் உலகளாவிய கொரோனா வைரஸ் நோய் தொற்று அச்சம் காரணமாக இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வதற்கான விசா வழங்கும் நடைமுறை மார்ச் 16ம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் வகையில் அங்குத் தேசிய அவசர நிலையை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்துள்ளார். மேலும் கொரோனாவைரஸைக் கட்டுப்படுத்த ரூ. 5000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல விசா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிலுவையில் உள்ள விசாக்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.