2023 – 24 ஆம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில் வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்படுமா ? உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட்டாக இவை அமையும்.
முழு நீள பட்ஜெட் என்பதால் நடுத்தர மக்களை ஈர்ப்பதற்கான முக்கிய திட்டங்கள் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வரிசலுகை, தொழில் உற்பத்தியை ஊக்குவிக்க சலுகைகள் உள்ளிட்டவை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. புத்தாக்க நிறுவனங்கள், சிறுகுறு தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுக்கான திட்டங்களும் இடம்பெறக்கூடும்.
நாகலாந்து, மேகலாயா, திரிபுரா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 9 மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபாண்டில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அந்த மாநிலம் சார்ந்த பல்வேறு திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற வாய்ப்புள்ளது. முன்னதாக நேற்று நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்தார். அதில் அடுத்த நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி வீதம் 6இல் இருந்து 6.8 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.