திருக்காட்டுப்பள்ளியில் முன்னறிவிப்பு இல்லாமல் மின்தடை… அவதியில் பொதுமக்கள்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி நகரில் முன்னறிவிப்பு இல்லாமல் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாலை 5.45 மணியிலிருந்து இரவு 7.25 மணி வரை மின்தடை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கேட்டபோது திருக்காட்டுப்பள்ளி துணை மின் நிலையம் அருகே மின்கம்பம் முறிந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் மாலை 4.05 மணிக்கு தடைப்பட்ட மின்சாரம் 6.55 மணிக்கு வந்தது. மாலை முடிந்து இரவு தொடங்கும் சமயத்தில் மின்தடை ஏற்பட்டிருப்பதால் கோடை வெப்பம் காரணமாக வியர்வை மற்றும் கொசுத்தொல்லை போன்றவற்றால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு, 11,12-ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருகின்ற நிலையில் இது போன்ற மின்தடை மாணவர்களை சிரமப்படுத்தி உள்ளதாக மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.