விடுமுறைக்காக கொரோனா வதந்தி -2 பேர் கைது!

சென்னை பூந்தமல்லியில் விடுமுறைக்காக கொரோனா குறித்து வதந்தி பரப்பிய ஊழியர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீனாவில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே பயம் காட்டி வருகின்றது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதனிடையே ஒவ்வொரு மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பள்ளி ,கல்லூரிகள் , திரையரங்குகள், வணிக வளாகங்கள் , மால்கள் என அனைத்தையும் வருகின்ற மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது.

அதேபோல பொதுமக்கள் யாரும் பொது இடங்களில் கூட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும் கொரோனா குறித்து யாராவது தவறாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது. அதன் படிகடந்த சில நாட்களாக வதந்தி பரப்பி வருபவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை பூந்தமல்லியில் விடுமுறைக்காக கொரோனா குறித்து வதந்தி பரப்பிய ஊழியர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பூந்தமல்லியை சேர்ந்த தனியார் தொழிற்சாலை ஊழியர் சிவகுமார், மலையம்பாக்கத்தை சேர்ந்த பெஞ்சமின் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கொரோனா அறிகுறி இருக்கிறதா என பரிசோதிக்கப்படும் பூந்தமல்லி சுகாதார மையம் பற்றி வதந்தி பரப்பியதால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.