பயணங்கள் தொடரும்…! அடடே ஓ.பி.எஸ்.!

பத்து நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார்.

துணை முதலமைச்சரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஒ.பன்னீர்செல்வம், 10 நாட்கள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். அவருடன் அவரது மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.ரவீந்திரநாத்தும் சென்றிருந்தார். இந்நிலையில் ஒ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஓபிஎஸ்ஸூக்கு கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:- கடந்த 10 தினங்களாக அமெரிக்காவிலுள்ள சிகாகோ உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு தொழில் முதலீட்டாளர்களுடன் கலந்து பேசினேன். அப்போது அவர்களிடம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளார்கள்.

அந்த அடிப்படையில் அமெரிக்க சுற்றுப்பயணம் அரசுக்கு உதவிகரமாகவும், வெற்றிக்கரமாகவும் நடந்துள்ளதை கூறுகிறேன். உலக வங்கி தமிழ்நாட்டின் வீட்டு வசதி, போக்குவரத்து உள்ளிட்ட திட்டங்களுக்கு உரிய நிதியை தரவேண்டும் என்று சுமூகமாக பேச்சு நடந்தது. முதல்கட்டமாக வீட்டு வசதி திட்டங்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி தருவதாக உறுதியளித்துள்ளார்கள்.

அமெரிக்கவாழ் இந்தியர்களும், அமெரிக்கர்களும் அன்பான வரவேற்பு, உபசரிப்பை அளித்தார்கள். இது மகிழ்ச்சியாக இருந்தது. அமெரிக்காவில் எவ்வகையான தொழில் நுட்பத்தில் வீடு கட்டுகிறார்கள், திட்ட மதிப்பு என்ன? என்பதையும் கேட்டு வந்தேன் என்றார்.இதையடுத்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர் செல்வம், ‘அமெரிக்காவில் கடும்குளிர் இருந்ததால், கோர்ட் போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. முதல் மூன்று நாட்கள் வேட்டியில் தான் இருந்தேன்’ என்றார்.

பயணம் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் , “பயணங்கள் தொடரும்”..! என்று புன்னகைத்தார்.மேலும் தமிழ்நாட்டில் வெற்றிடம் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியது குறித்து கேட்டதற்கு, அதிர்ஷ்டம் காரணமாக எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்துவிட்டார் என்ற ரஜினிகாந்தின் பேச்சை கண்டிப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *