கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர்…. துடிதுடித்து இறந்த 2 பேர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள சித்தூர் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அங்கதான்வலசை கிராமத்தில் வசிக்கும் டிராக்டர் டிரைவரான கோவிந்தன் என்பவர் அதேப்பகுதியில் உள்ள ஒருவருடைய நிலத்தில் ஏர் ஓட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது அவருடன் மணிகண்டனும் சென்றுள்ளார். இதனையடுத்து 2 பேரும் டிராக்டர் ஓட்டிய பிறகு டீசல் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இதனையடுத்து சித்தூர் கூட்ரோடு அருகில் உள்ள 15 அடி உயர செங்குத்தான மலைப் பகுதியில் டிராக்டரை ஓட்டிச் சென்றுள்ளனர்.

அப்போது மலையின் உச்சிப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது டிராக்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து 15 அடி உயரத்திலிருந்து தலைகீழாக உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் டிராக்டரில் இருந்த மணிகண்டன் மற்றும் கோவிந்தன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.