இன்றைய ஐபிஎல் போட்டி : CSK VS SRH பலப்பரீட்சை..!!

இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகிறது

ஐ.பி.எல் 41 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகிறது. இப்போட்டி சென்னை  சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான சென்னை அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 7வெற்றியும், 3 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளது. இன்னும் 1 போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றை உறுதி செய்து விடும்.சென்னை அணி கடந்த 2 போட்டிகளில் ஹைதராபாத், பெங்களூரு அணிகளிடம் தோற்றுள்ளது. பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

கேப்டன் தோனி மட்டும் தனி ஒருவராக போராடி 48 பந்துகள் 84 ரன்கள் குவித்தார். சென்னை அணியில் கேப்டன் தோனி சிறப்பாக செயல்படுகிறார். டாப் 3 பேட்ஸ்மேன்களான சேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, ரெய்னா ஆகியோர் சொதப்பி வருவதால் அந்த அணிக்கு சற்று பின்னடைவாக இருக்கிறது.அவர்கள் பார்முக்கு திரும்பினால் அணி கூடுதல் வலு பெரும். பவுலிங்கில் தீபக் சாஹர், இம்ரான் தாஹிர் ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர். சென்னை ஆடுகளம் சுழற்பந்துக்கு சாதகமானது என்பதால் இன்றைய போட்டியில் ஹர்பஜன் சிங்குக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைதராபாத் அணி இதுவரையில் 9 போட்டிகள் விளையாடி 5வெற்றியும், 4 தோல்வியும் பெற்றுள்ளது.  அந்த அணியில் டேவிட் வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் பேட்டிங்கில்  அதிரடி காட்டி அசத்துகின்றனர்.  உலக கோப்பையில் தங்கள் நாட்டு அணியில் இடம் பெற்றிருக்கும்  இருவரும் சொந்த நாட்டுக்கு செல்லும் முன்பு அணியை அடுத்த சுற்றுக்கு கொண்டு செல்லும் முனைப்பில் உள்ளனர். அந்த அணியில் மிடில் வரிசையில் கொஞ்சம் சறுக்கல் உள்ளது.அந்த அணி கடந்த 2 போட்டிகளில் சென்னை, கொல்கத்தா அணிகளை வெற்றி பெற்றிருப்பதால் புத்துணர்ச்சியுடன் காணப்படுவதால் இன்றைய போட்டியில் வெற்றியின் முனைப்பில் களமிறங்கும்.  பந்து வீச்சில் ரஷித் கான், புவனேஸ்வர்  குமார் ஆகியோர் பார்மில் உள்ளனர்.

 

சென்னையை அணி கடந்த போட்டியில் ஹைதராபாத்துக்கு  எதிரான போட்டியில் தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாகவும், இதில் வெற்றி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்யும் விதமாகவும் களம் காண இருக்கிறது. அதே நேரத்தில் ஹைதராபாத் அணி வெற்றி வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் களமிறங்குவதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை. இரண்டு அணிகளும் இதுவரை மொத்தம் 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் சென்னை அணி 8 முறையும், ஹைதராபாத் அணி 3 முறையும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.