ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆந்திரா உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து ரயிலில் கஞ்சா, அரிசி கடத்தி வரப்படுவதால் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடிக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது சிறுவன் உட்பட 3 பேர் சந்தேகப்படும்படி அமர்ந்திருந்ததால் காவல்துறையினர் அவர்கள் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்துள்ளனர்.
அதில் 12 கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது. பின்னர் காவல்துறையினர் அவற்றை பறிமுதல் செய்து கடத்தி வந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சந்திர கண்ஹார், சுனில் திருமாலின் மற்றும் 15 வயதுடைய சிறுவன் ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.