வரலாற்று ஆய்வு : மதுவிலக்கை அமல்படுத்திய முதல் தமிழக முதல்வர்…!!

ராஜகோபாலச்சாரி தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமாக பேசப்படும் முதல்வர்களில் ஒருவர். தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் பிறந்த இவர் ஆரம்ப காலகட்டத்தில் வழக்கறிஞர் தொழிலை செய்து வந்தார். அதில் நல்ல வெற்றியும் கண்டு வந்த இவர், 1917 பிற்பாடு காங்கிரஸில் இணைந்தார். அதன்பிறகு ஒத்துழையாமை இயக்கம், சத்தியாகிரக போராட்டம், தண்டி யாத்திரை உள்ளிட்ட பல சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டார்.

இவர் வகித்த பதவிகள் ஏராளம். அதில் குறிப்பிட்டு கூற வேண்டுமென்றால், 1947 முதல் 1948 வரை மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்தார். அதை தொடர்ந்து 1948 முதல் 1950 வரை விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்தார். அதைத்தொடர்ந்து உள்துறை அமைச்சராகவும் தமிழகத்தின் முதலமைச்சராகவும்(1952-1957) பணியாற்றினார். 1954ஆம் ஆண்டு இந்திய நாட்டின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதை பெற்றார்.

இந்தியாவில் மொழித் திணிப்பை முதல்முதலாக ஏற்படுத்தியவர் இவர் தான் எனக் கூறலாம். 1937 ஆம் ஆண்டு அதுவரை காங்கிரஸ் ஆட்சியில் எந்த மாகாணத்திலும் இல்லாத ஹிந்தி மொழி கட்டாயம் திட்டத்தை செயல்படுத்த துடித்தார். இதன் காரணமாகவே பின்னாளில் காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியை முற்றிலும் பிடிக்க தவறியது.  இப்படி இவருக்கு எதிர்மறையான ஒரு பக்கம் இருக்கும் பட்சத்தில், மற்றொரு பக்கம் மதுவிலக்கு கொள்கையில் தீவிரமாக இருந்தார்.

மதுவின் தீமையை உணர்ந்து, மக்களின் நன்மைக்காக மதுவிலக்கை அமல்படுத்துவதில் தீவிரமாக செயல்பட்டார். அதன்படி, 1939 முதல் 1952 தமிழகத்தின் பல பகுதிகளில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார். இதனால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை தவிர்க்க விற்பனை வரியை அமல்படுத்தினார்.

ஆனால் அதன் பிறகு திமுக தமிழகத்தில் வெற்றி பெற்றதையடுத்து தங்களது தேர்தல் பிரச்சாரங்களில் ஒன்றான மதுவிலக்கு நிராகரிப்பு திட்டத்தை தமிழகத்தில் 1971 ஆகஸ்டு மாதத்தில் அமல்படுத்த உள்ளதாக தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேரடியாக கருணாநிதியை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து இத்திட்டத்தை கைவிடுமாறு வேண்டுகோளும் விடுத்தார். காங்கிரஸுக்கு பின்னால் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை பிடிக்க உறுதுணையாக நின்றவர் ராஜகோபாலச்சாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *