பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றல் நிகழ்ச்சி…. ஆர்வமாக பங்கேற்ற குழந்தைகள்…. பாராட்டிய பெற்றோர்கள்…!!!

திருவண்ணாமலை கண்ணமங்கலத்தில் உள்ள ராமசாணிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றல் நிகழ்ச்சியானது நடைபெற்றது. கற்றலின் இனிமை திருவிழா என்ற இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரி தலைமை தாங்க, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரா.வாசுகி முன்னிலை வகித்தார்.

இதில் பள்ளியில் படிக்கும் 1-ம்வகுப்பு முதல் 3-ம்வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் குழந்தைகளின் கற்றல் திறன்கள், அவர்களின் கை வண்ணங்களால் வரைந்த ஓவியங்கள், பாடல்கள் பாடுதல், கதை கூறுதல் போன்ற நிகழ்வுகளை பெற்றோர்கள் பாராட்டி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் க.பிரபாகரன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதனையடுத்து வந்திருந்த அனைவருக்கும் கேழ்வரகு அடை, தேநீர் வழங்கப்பட்டது.