குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை புகுந்து நாயை கவ்விச் சென்ற சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக இருந்து வருகின்றது. இந்நிலையில் கொடநாடு செல்லும் சாலையில் முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவரது வீட்டில் வளர்ப்பு நாய் குரைத்தபடி இருந்துள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் திடீரென நாயின் சத்தம் நின்று விட்டது. இதனால் சந்தேகமடைந்த முருகன் வீட்டின் வெளியே சென்று பார்த்தபோது வாசலில் ரத்தமாக கிடந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் தனது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவுகளை சோதித்து பார்த்த போது குடியிருப்புக்குள் சிறுத்தை புகுந்து வளர்ப்பு நாயை கவ்வி சென்ற காட்சி பதிவாகியிருந்தது. எனவே அவர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதி மக்கள் கூறுகையில் இங்கு உலா வரும் சிறுத்தையினால் நாங்கள் அச்சம் அடைந்து உள்ளோம் எனவும், மனிதர்களை தாக்குவதற்குள் அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.