நாகர்கோவிலில் ரூ 2000 கள்ள நோட்டை திரையரங்கில் கொடுத்து மாற்ற முயன்றது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பள்ளிவிளையைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் படம் பார்க்க திரையரங்கிற்கு சென்று டிக்கெட் எடுக்க 2,000 ரூபாயை கொடுத்துள்ளார். அந்த ரூபாய் நோட்டு மீது திரையரங்கு ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த காவல்துறையினர் ரமேஷ் கொடுத்த நோட்டை பார்த்ததில் அது கள்ள நோட்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் 2000 ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து அதனை புழக்கத்தில் விட்டது தெரியவந்தது. இதையடுத்து ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளியான தினகரன், ஜோசப் மெனோவா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இதுவரையில் எவ்வளவு ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.