ஒடிசாவில் குழந்தை இல்லாததால் உதவி பேராசிரியர் தனது மனைவியுடன் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 38 வயதான ஆர்.ஜெயபாலன் ஒடிசா மாநிலத்தின் ரூர்கேலா (Rourkela) வில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIT) உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு மாலினி (35) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு திருமணமாகி கிட்டதட்ட 9 ஆண்டுகள் ஆகிவிட்டது இருப்பினும் இத்தம்பதியினருக்கு குழந்தை இல்லை. ஜெயபாலன் தனது மனைவியுடன் ரூர்கேலாவில் உள்ள (NIT) கல்லூரி குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ஜெயபாலன் வீடு உட்பக்கமாக பூட்டி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஜெயபாலனும் அவரது மனைவியும் இறந்து கிடந்தனர். இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களது வீட்டில் 4 பக்க அளவில் ஒரு கடிதம் கிடைத்தது. அந்த கடிதத்தில், “தங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. குழந்தை இல்லாத ஏக்கத்தில் நாங்கள் தற்கொலை செய்துகொண் டோம். தங்கள் பெற்றோர் இந்த முடிவுக்காக தங்களை மன்னிக்க வேண்டும் என்று எழுதியிருந்தது. மேலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம் என்று ரூர்கேலா எஸ்.பி சர்தாக் சாரங்கி தெரிவித்துள்ளார். குழந்தையில்லாததால் தமபதியினர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.