கிண்டி மருத்துவமனையை ஜூன்.20-ல் திறந்து வைக்கும் குடியரசு தலைவர்… வெளியான தகவல்…!!!!

கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ.230 கோடியில் ஆயிரம் படுக்கை வசதியுடன் கூடிய பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கடந்த வருடம் அடிக்கல் நாட்டியுள்ளார். இதற்காக 4.89 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட  மூன்று கட்டிடங்கள் 51,429 சதுர மீட்டரில் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் முதல் கட்டிடமான ஏ பிளாக்கில் ரூ.78 கோடியில் 16 ஆயிரத்து 736 சதுர மீட்டர் பரப்பளவில் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு மற்றும் நிர்வாக கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பி பிளாக் ரூ.78 கோடி மதிப்பீட்டில் 18,725 சதுர மீட்டரில் அறுவை சிகிச்சை வளாகம் தீவிர சிகிச்சை பிரிவுடன் கட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மூன்றாவது கட்டமான சி பிளாக் ரூ.74 கோடியில் 15 ஆயிரத்து 968 சதுர மீட்டரில் கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு மற்றும் வார்டுகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவக் கழிவுகள் நிறுவும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் ஜூன் 5-ம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அந்த மருத்துவமனையை திறந்து வைப்பதாக இருந்தது. இதற்கான அழைப்பிதழ்களும் அரசு சார்பாக அச்சிடப்பட்டு விழா ஏற்பாடு பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் ஜூன் முதல் வாரத்தில் குடியரசு தலைவர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள இருப்பதால் மருத்துவமனை திறப்பு விழா ஒத்திவைக்கப்படுவதாக தமிழக மருத்துவ துறை கூறியுள்ளது.

இந்நிலையில் வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு நாடி திரும்பிய பின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூன் 20ஆம் தேதி கிண்டி மருத்துவமனையை திறந்து வைப்பதற்காக தமிழகம் வர இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஓரிரு நாட்களில் தமிழக அரசு திறப்பு விழா குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.