சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலின் பெயர் எஃப்ஐஆரில் சேர்க்கப்பட்டுள்ளது.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) என்பவர் கடந்த 12ம் தேதி கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து விட்டு பணி முடிந்து பள்ளிக்கரணை வழியாக சாலையில் தனது பைக்கில் சென்று வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். அந்த நேரத்தில் பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். இதனிடையே இளம்பெண் உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீஸார் அஜாக்கிரதையாக இருந்து மரணத்தை விளைவித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுத்து வந்தனர். இதையடுத்து பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான தனது இல்ல திருமணவிழாவுக்கு பேனர் வைத்த அதிமுக பிரமுகர் பெயர் எஃப்ஐஆரில் சேர்க்கப்பட்டுள்ளது. பேனர் வைத்தவர் பெயரை வழக்கில் ஏன் சேர்க்கவில்லை என உயர்நீதிமன்றம் முன்னதாக விசாரணையின் போது கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.