இன்டர்வியூ நடத்தும் ரோபோ..நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சி…..!!

கார்ப்பரேட் நிறுவனங்களின் வேலைக்கு இன்டர்வியூ நடத்தி ஆட்கள் எடுக்கும் பணிக்கு நவீன ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.

உலகில், தொழில் நுட்பங்களின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி அன்றாடம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள நிறுவனங்களில் மக்களை கவர புதிய யுக்திகள் கையாளப்படுகின்றன. அந்த வகையில், சுவீடனில் உள்ள பிரபல கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் மிகவும் நுட்பமான கணினி மொழிகளை பயன்படுத்தி, பணிக்கு ஆட்கள் எடுக்கும் ரோபோவை உருவாக்கியுள்ளது.இது குறித்து, ரோபோ வடிவமைப்பாளர்கள் கூறியிருப்பதாவது: “சுவீடனில், படித்து முடித்து வேலைதேடும் இளைஞர்களில் 73 சதவீதம் பேர், ‘பாலினம், வயது மற்றும் தோற்றம் போன்றவற்றால் பணி கிடைப்பதில்லை’ என தெரிவித்திருந்தனர். இதனால், கார்ப்பரேட் நிறுவனங்களில் இன்டர்வியூ நடத்தி வேலைக்கு ஆட்கள் எடுக்கும் மனித வள மேம்பாட்டு அதிகாரி (ஹெச்.ஆர்) பணிக்காக, பெண்ணின் முக அமைப்பில் நவீன ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

மிகுந்த நடுநிலை தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோவுக்கு ‘தங்காய்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதனுடன், மைக்ரோ போன் மூலம் மனிதர்கள் எளிதாக உரையாடவும், அதன் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் முடியும். இந்த ரோபோ தற்போது சுவிடிஷ் மட்டுமே பேசக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சுவீடனில் உள்ள மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த ரோபோவை சோதனை செய்தனர்.

இந்த ரோபோ, மனிதர்களைவிட சிறந்த முறையில் பணிக்கு ஆட்களை எப்படி தேர்வு செய்கிறதென்றால், மனிதர்களாகிய நம்மில் பலருக்கு ஒருவரைப் பார்த்ததும் தவறாக எண்ணும் வழக்கம் உள்ளது.  இதனால், பல திறமை வாய்ந்த இளைஞர்கள் வேலை வாய்ப்பை இழக்கின்றனர். இதனை தவிர்க்கவே இந்த ரோபோ உபயோகப்படுத்தப்படும். இந்நிலையில்,     மற்ற நாடுகளுக்கான இந்த ரோபோ இந்த ஆண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டிலோ தயார் செய்து விடப்படும். தற்போது இந்த ரோபோ ஆங்கிலத்தில் பேச பயிற்சி எடுத்து வருகிறது” என அவர்கள் தெரிவித்தனர்.