டெல்லியில் இன்று நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதில் பாரதிய ஜனதா மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. பாரதிய ஜனதாவை எதிர்த்த கட்சிகள் அனைத்தும் மோசமான தோல்வியை சந்தித்தன. இதையடுத்து மக்களவை தேர்தலில் அடைந்த படுதோல்வி குறித்து ஆலோசனை நடத்துவதற்காக டெல்லியில் இன்று எதிர்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த கூட்டத்திற்கு பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. இந்த கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறுவதாக இருந்தது. இக்கூட்டத்தில் ஜூன் 6 -ல் தொடங்க இருப்பதாக கூறப்படும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றியும் ஆலோசிப்பதாக இருந்தது. இந்த நிலையில், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் பங்கேற்காததால், இன்று மாலை நடப்பதாக இருந்த ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.