என் மனைவியை அனுப்புங்க…… மாமனார் விரலை கடித்து துப்பிய மருமகன் கைது….. செங்கல்பட்டு அருகே பரபரப்பு…..!!

செங்கல்பட்டு அருகே குடும்பத் தகராறில் மாமனாரின் விரலை கடித்து துப்பிய மருமகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் பகுதியை அடுத்த தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னன்.  இவரது மனைவி கற்பகம். இவர்கள் இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் பொன்னனுக்கு  குடிப்பழக்கம் அதிகம் இருப்பதால் நாள்தோறும் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்ததோடு மட்டுமல்லாமல்,

குடும்பத்தையும் ஒழுங்காக பராமரிக்காமல் இருந்து வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த கற்பகம் கணவனை பிரிந்து தென்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சில மாதங்களுக்கு முன் சென்று விட்டார்.

இந்நிலையில் நேற்று பொன்னன்  மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைப்பதற்காக மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கற்பகம் மறுக்கவே தொடர்ந்து இவர் வற்புறுத்தியுள்ளார். அப்போது பெண்ணின் தந்தை குறுக்கிட்டு ஒழுங்காக குடும்பம் நடத்தாததால் தானே அவள் வர மறுக்கிறாள் என்று கூறி விரட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொன்னன் மாமனாரின் ஆள்காட்டிவிரலை கடித்து துப்பி உள்ளார். வலி தாங்க முடியாமல் அலறிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

பின் இதுகுறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் வழக்குப்பதிவு செய்து பொன்னனை கைது செய்தனர்.