தரக்குறைவாக திட்டிய போலீசார்… தீக்குளித்த லாரி டிரைவர்..!!

கூடலூரில் போலீசார் தகாத வார்த்தைகளால் திட்டியதாக லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் தியாகராஜா.. 52 வயதுடைய  இவர் நந்தட்டி பகுதி வழியாக கூடலுரை நோக்கி லாரியை ஓட்டி வந்துகொண்டிருந்த போது,  ஆட்டோ ஒன்றில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் லாரி, ஆட்டோ டிரைவர்கள் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் மணிதுரை இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, ஆவணங்களை எடுக்க லாரிக்குள் சென்ற டிரைவர்  தியாகராஜா தற்கொலை செய்ய முடிவெடுத்து திடீரென தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்..

இதையடுத்து உடனடியாக அவர் மீட்கப்பட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் உடலில் 45 சதவீத தீக்காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக கோவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.. இந்தச் சம்பவம் தொடர்பாக கூடலூர் ஆர்டிஒ ராஜ்குமாரும் பாதிக்கப்பட்ட டிரைவரிடம்  விசாரணை நடத்தியுள்ளார்.

இதுபற்றி லாரி டிரைவர்கள் கூறுகையில், தன்னை காவல் உதவி ஆய்வாளர் மணிதுரை மிகவும் தகாத வார்த்தைகளால் தொடர்ந்து தர குறைவாக திட்டியதால் மனமுடைந்து தீ வைத்துக் கொண்டதாக டிரைவர் தியாகராஜா தெரிவித்ததாகவும், போலீசார் லாரி டிரைவர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதும், தேவையில்லாமல் அபராதம் விதிப்பதும் தொடர்கதையாகி  வருகின்றது என்றும் கூறினார்கள்.

மேலும், கொரோனா ஊரடங்கால் போதிய வருமானமின்றி சிரமத்தில் இருக்கும் டிரைவர்கள் இதுபோன்ற (தற்கொலை) முடிவுகளுக்கு வந்து விடுவதாகவும், காவல்துறையினரின் கெடு பிடிகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் லாரி டிரைவர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்மந்தப்பட்ட லாரி டிரைவர் குடிபோதையில் விபத்து ஏற்படுத்தியதாகவும், விசாரணைக்கு சென்ற காவல் உதவி ஆய்வாளர் ஆவணங்களை கேட்டபோது, அவர் திடீரென எதிர்பாராத விதமாக தீ வைத்துக் கொண்டதாகவும், தொடர் விசாரணையில் சரியான தகவல் தெரிய வரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *