தமிழ் திரையுலகில் மிகப்பெரிய புரட்ச்சியை ஏற்படுத்திய மாபெரும் ஆளுமை கொண்ட கலைஞர் கருணாநிதியின் சினிமா வரலாற்றை இச்செய்தியில் சற்று விரிவாக காண்போம்.
தமிழும், வடமொழியும் கலந்த வசனங்கள், மேலோங்கிய பாடல்கள் விளங்கிய திரைப்படங்கள், சாதிய அடையாளங்கள் கொண்ட கதைகள் என 1940களில் இப்படி இருந்த திரையுலகை ஒரு தீட்டிய பகுத்தறிவு கருத்து, சமத்துவம் பேசும் மாந்தர்கள், பாமரர் பற்றிய கதைகள் என தமிழ் படத்தை மாற்றி அமைத்தவர் கலைஞர் என்றால் அது மிகையாகாது. அதில் திணிக்கும் வசனங்களால் தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றவர் கலைஞர். தந்தை பெரியாரின் குடியரசு அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது கோவை ஜூபிடர் நிறுவனம் எடுத்த ராஜகுமாரி திரைப்படத்தில் வசனம் எழுதும் வாய்ப்பு கலைஞருக்கு கிடைத்தது.

1947 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்திற்கு வசனம் எழுதிய போது கலைஞரின் வயது 23 இந்த படத்தில்தான் MGR முதன்முதலாக கதாநாயகனாக நடித்தார். இதையடுத்து அபிமன்யு படத்திற்கு வசனம் எழுதிய கலைஞரின் பெயர் திரையில் இடம் பெறவில்லை. இதனால் கோவையில் இருந்து திருவாரூர் திரும்பினார் கலைஞர். அப்போதும் எழுத்துப் பணியை விடாது தேவி நாடக சபைக்காக குண்டலகேசி காப்பியத்தை மையப்படுத்தி மந்திரகுமாரி என்ற நாடகத்தை எழுதினார்.
இந்த நாடகத்தின் வெற்றி மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் கலைஞருக்கு 500 ரூபாய் மாத சம்பளத்தை பெற்று தந்தது. மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் போது தான் கவியரசர் கண்ணதாசன்,மருதகாசி ஆகியோரின் நட்பு கலைஞருக்கு கிடைத்தது. பெரும் வரவேற்ப்பை பெற்ற மந்திரகுமாரி நாடகம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் திரை வடிவம் பெற்று பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை பார்த்த கலைவாணன் கலைஞரை நேரில் சென்று பாராட்டியதோடு மணமகள் திரைப்படத்திற்கு வசனம் எழுத வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதற்கு கலைவாணன் கலைஞருக்கு கொடுத்த சம்பளம் 10,000 ரூபாய். கலைஞரின் திரைப்பயணத்தில் மட்டுமின்றி தமிழ் திரையுலகிற்கு முக்கிய மைல்கல் திரைப்படமாக சிவாஜி கணேசன் முதன்முதலாக நடித்த பராசக்தி திரைப்படம் அமைந்தது. இப்படத்தின் நீதிமன்ற காட்சிகளில் வரும் வினோத வழக்கை போலவே சமூகத்தில் நடக்கக் கூடிய அவலங்களை கேள்விகேட்கும் நாயகன், புரட்சி பேசும் நாயகி பிச்சைக்காரர்களின் உரிமை என அதுவரை தமிழ் சினிமா காணாத முக்கிய கதை களத்தை காட்டினார் கலைஞர். படத்தில் இடம்பெற்றுள்ள அனல் தெறிக்கும் வசனங்கள் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது.
சிலப்பதிகாரக் காப்பியம் உணர்த்திய அரசியல் பாமர மக்கள் வரை சென்று சேர்த்தது. கலைஞரின் கதை வசனத்தில் வெளியான முன்னுதாரண திரைப்படம் பூம்பூகார். அதிலும் கண்ணகியின் கதையை தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை அவரே சொல்லி கதையைக் கூறுவது போன்ற நடை தமிழ் சினிமாவிற்கு புதிதாக இருந்தது. தொடக்கத்திலிருந்து புதுமை என்றால் இறுதிக்காட்சியில் பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு விஜயகுமாரி பேசிய வசனம் ரசிகர்களை இமைக்காமல் பார்க்க வைத்தது. 1984 ஆம் ஆண்டு வெளிவந்த மனோகரா திரைப்படமும் கலைஞருக்கு பெரும் வெற்றியை தேடித்தந்தது.
இதே போல ராஜா ராணி திரைப்படத்தில் கலைஞர் எழுதிய வசனமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்படத்தில் செங்குட்டுவன் ஆக சிவாஜி நடிக்கும் நாடகம் ஒன்று இடம்பெற்று இருக்கும். அதில், சிவாஜி பேசிய அடுக்குமொழி வசனங்கள் தமிழ் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது போலிருந்தது. கலைஞர் சிவாஜி கூட்டணியில் வெளிவந்த பராசக்தி மனோகரா ராஜாராணி உதயம் ரங்கூன் ராதா உள்ளிட்ட திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றவை. அதன் பின் வெளியான பாலைவன ரோஜாக்கள் மாடி வீட்டு ஏழை என 1980களில் பல திரைப்படங்களுக்கு கலைஞர் வசனம் எழுதியிருக்கிறார்.
இவரது வசனத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த பாசப்பறவைகள் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. பராசக்திக்கு பிறகு இப்படத்தில் நடைபெற்ற நீதிமன்ற காட்சியும் மக்களை பெரிதளவில் ரசிக்க வைத்தது. கலைஞரின் கைவண்ணத்தில் வெளிவந்த பிரம்மாண்டமான பொன்னர் சங்கர் கதையும் 1980களில் வெளியாகி விற்பனையில் பெரும் சாதனை படைத்தது இலக்கிய உலகில் கலைநயம் படைத்த நாவல், 2011ஆம் ஆண்டு திரை வடிவம் பெற்றது. பிரபு ஜெயராம் உள்ளிட்டோர் படத்தில் நடித்திருந்தனர்.
பொன்னர் சங்கர் திரைப்படம் தான் கலைஞர் கடைசியாக வசனம் எழுதிய திரைப்படம் 23 வயதில் ராஜகுமாரி திரைப்படத்திற்காக வசனம் எழுத தொடங்கிய கலைஞர் 80 வயதுக்கு பிறகும் கண்ணம்மா பாசக்கிளிகள், உளியின் ஓசை, என பல்வேறு திரைப்படங்களுக்கு கதை வசனங்கள் எழுதி இருக்கிறார். பொன்னர் சங்கர் திரைப்படத்திற்கு வசனம் எழுதிய போது கலைஞரின் வயது 87. 73 முதல் 87 வயது வரை 60 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதிய தமிழ் திரையுலகின் மாபெரும் ஆளுமை கலைஞர் என்றால் அது மிகையாகாது.