சென்னை ஆவடியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி மீது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை ஆவடி அடுத்துள்ள சேக்காடு அண்ணா நகரில் வசித்து வந்த 62 வயதான ராஜேஸ்வரி என்ற மூதாட்டி தனது கணவர் சுப்பிரமணி இறந்த பின்பு வீட்டில் தனியாக வாழ்ந்து வருகிறார். இவரது மகன் முருகன் என்பவர் அருகிலுள்ள வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இந்தநிலையில் இன்று மதியம் வீட்டில் இருந்த மூதாட்டி மீது திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் மூதாட்டியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்த பின் ஆவடி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வந்த மீட்பு படையினர் மூதாட்டி ராஜேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.