நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரின் தூக்கு தண்டனை உறுதியானது – நாளை காலை 5.30க்கு தூக்கு!

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றவாளிகள் நால்வரும் தங்களுக்குரிய சட்ட வாய்ப்புகளைமாறி மாறி பயன்படுத்தியதால் 3 முறை தூக்கு தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியில் வருகின்ற நாளை (20ம் தேதி) காலை 5: 30 மணிக்கு அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய நால்வரையும் தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் குற்றவாளிகள் தூக்கு தண்டனையிலிருந்து தப்பிக்க ஒருவருக்கொருவர் என மாறி மாறி சீராய்வு மனுக்கள், மற்றும் கருணை மனுக்களை தாக்கல் செய்து வந்தனர். நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ், தனது தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனுவை நேற்று முன்தினம் தாக்கல் செய்தான்.

அந்த மனுவை நேற்று விசாரித்த டெல்லி நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் குற்றவாளி பவன் குமார் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த புதிய சீராய்வு மனுவும் இன்று காலை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நாளை காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் குற்றவாளிகள் பவன் மற்றும் அக்‌ஷய் இரண்டாவது முறையாக கருணை மனு தாக்கல் செய்த நிலையில் அதனை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஏற்கவில்லை. இதனையடுத்து குற்றவாளிகள் 4 பேரின் துக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இதனிடையே நேற்று குற்றவாளிகளின் எடைகொண்ட 4 பொம்மைகள் மூலம் ஹேங்மேன் பவன் ஜலாத்தை வைத்து துக்கு தண்டனை ஒத்திகை நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.