தொடர்ந்து 5 வெற்றி….. பாகிஸ்தான் அணியை ஒயிட் வாஷ் செய்தது ஆஸ்திரேலிய அணி…!!

பாகிஸ்தான் அணியுடனான ஐந்தாவது ஒரு நாள் போட்டியையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.  ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த இந்த தொடரின் முதல் நான்கு போட்டியில் வென்ற ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றி விட்ட நிலையில் ,  இவ்விரு அணிகளுக்கும் இடையிலான கடைசி மற்றும் 5வது ஒரு நாள் போட்டி துபாயில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கவாஜா 98 ரன் எடுத்து இரண்டு ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். கேப்டன் ஆரோன் பின்ச் 53 ரன்னும் , ஷான் மார்ஷ் 61 ரன்னும் , கிளன் மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 70 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் உஸ்மான் சின் வாரி 4 விக்கெட்டும் , ஜுனைத் கான் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் ஹாரிஸ் சோஷைல் அபார சதம் அடித்து 130 ரன் குவித்தார். அதே போல ஷான் மசூத் 50 ரன்னும் , பொறுப்புடன் விளையாடிய துணை கேப்டன் இமாத் வாசிம் 50  ரன்னும் ,  உமர் அக்மல் 43 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 305 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 20 ரன் வித்தியாசத்தில் ஆஸி அணி வெற்றிபெற்றது. 33 பந்துகளில் 70 ரன்கள் விளாசிய மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியை அடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணியை ஒயிட் வாஷ் செய்தது ஆஸ்திரேலிய அணி.