உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மாற்ற தமிழக அரசு வலியுறுத்தல் – அமைச்சர் சி.வி. சண்முகம்!

2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று சட்டபேரவை கூடிய நிலையில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் சி. வி. சண்முகம், 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் செயலகத்தில் இருந்து பதில் வந்துள்ளது, அதில் விசாரணை நடைபெற்று வருகிறது இன்னும் முடியவில்லை என கூறப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.

7 பேர் விடுதலை விவகாரத்தில் விசாரணை அறிக்கையை பொறுத்தே முடிவெடுக்கப்படும் என ஆளுநர் அலுவலகம் கூறியுள்ளதாகவும், ஜெயின் கமிஷன் அடிப்படையில் பன்முகத்தன்மை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கில் பன்முகத்தன்மை குழுவின் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பன்முகத்தன்மை குழுவின் அறிக்கை தாக்கல் செய்ய பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் அலுவலகம் பதில் அளித்துள்ளது என அமைச்சர் கூறியுள்ளார். மேலும் 7 பேர் விடுதலை விவகாரத்தில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மாற்றுவது குறித்து தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்றும் மத்திய அரசின் ஆட்சி மொழி துறைக்கு தமிழக அரசு சார்பாக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தமிழக அரசு அமைக்கப்பட்ட சிங்காரவேலர் ஆணையம் அதற்கான அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பாக அமைக்கப்பட்ட ராஜேஸ்வரன் ஆணையமும் தமிழக அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது என கூறிய அவர், திமுக ஆட்சியில் எத்தனை விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டன? எத்தனை நாட்கள் விசாரணை நடத்தியுள்ளன? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனையடுத்து கொரோனா நடவடிக்கை குறித்து பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம், தமிழத்தில் உள்ள சிறைகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். சிறைகளில் கைதிகளை பார்க்க வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும் முக்கிய வழக்குகளுக்காக மட்டுமே வழக்கறிஞர்கள் சிறையில் அனுமதிக்கப்படுகின்றனர் என்றும் விளக்கமளித்துள்ளார்.