கிரிக்கெட்டை தொடர்ந்து கபடியிலும் மாஸ் காட்ட காத்திருக்கும் தமிழ்நாடு!

வருகிற 2020ஆம் ஆண்டு தமிழ்நாட்டில், தமிழ்நாடு சடுகுடு பிரீமியர் லீக் தொடரை நடத்தவிருப்பதாகத் தமிழ்நாடு கபடி விளையாட்டு சங்கம் தெரிவித்துள்ளது.

புரோ கபடி போட்டிகளைப் போலவே உள்ளூர் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் வருகிற 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு சடுகுடு பிரீமியர் போட்டிகளை நடத்த, தமிழ்நாடு கபடி சங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கான கூட்டம் திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு கபடி சங்கத்தின் தலைவர் முத்துசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த 20 ஆண்டுகளாக இந்திய கபடி அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் யாரும் பங்கு பெறவில்லை. அதேபோல் இந்திய இன்டோர் பிரீமியர் லீக் போட்டியிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சில வீரர்கள் மட்டுமே இடம் பெற்றனர். மீதமுள்ள அனைவரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் தமிழ்நாடு வீரர்களை கபடியில் ஊக்குவிக்கும் வகையில் ‘தமிழ்நாடு சடுகுடு பிரீமியர் லீக் போட்டிகள்’ வரும் மார்ச் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது.

இதற்கென தலா 15 தமிழ்நாடு வீரர்களைக் கொண்ட எட்டு அணிகள் உருவாக்கப்பட உள்ளது. இதில் மொத்தம் 120 வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த எட்டு அணிகளையும் பிரபல தொழிலதிபர்கள், நடிகர்கள் சசிகுமார், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரை உரிமையாளர்களாகக் கொண்டு செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கான வீரர்கள் தேர்வு டிசம்பர் 14, 15ஆம் தேதிகளில் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வில் கலந்துகொள்ள வயது வரம்பு கிடையாது. 85 கிலோ எடைக்குள் இருந்தால் போதுமானது எனத் தெரிவித்தார்.

மேலும், முழுக்க முழுக்க இந்த 8 அணிகளும் தமிழ்நாடு வீரர்களை மட்டுமே உள்ளடக்கியதாக இருக்கும். இந்தத் தேர்வில் சுமார் 500 வீரர்கள் கலந்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் புகழ்பெற்ற முன்னணி கபடி வீரர்கள் எட்டு பேர் விளையாட்டு வீரர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபடுவார்கள் எனவும் புரோ கபடி போட்டிகளைப் போல் இந்தப் போட்டிகளும் உள்விளையாட்டரங்கில் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *