மறைந்த திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் படத்திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
திமுகவின் பொதுச்செயலாளர் மறந்த பேராசிரியர் அன்பழகனின் உருவப்படம் திறப்பு விழா நேற்று அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் , திமுக சட்டமன்ற , பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். முக .ஸ்டாலின் அன்பழகன் போட்டோவை திறந்து வைத்ததை தொடர்ந்து அனைவரும் அன்பழகனும் புகழஞ்சலி செலுத்தினர்.
இதில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில், இந்தியா முழுவதும் பெரியாரின் தேவை உருவாகியிருக்கிறது. JNU மாணவர்கள் போராட்டம் நடத்தும் போது களத்தில் முதல் முழக்கமாக ஜெய் பெரியார் என்கிறார்கள். ஆகவே பெரியார் சிந்தனையை காப்பாற்றுவது என்பது தான் நாம் மக்களுக்கு செய்யும் தொண்டு. கலைஞ்சர் , பேராசிரியர் இல்லாமல் இழந்த திமுகவை, தலைவர் பொறுப்பையும், பொதுச் செயலாளர் பொறுப்பையும், பொருளாளர் பொறுப்பையும் ஒரே நேரத்தில் சுமந்த உங்களின் தோள் இந்த கழகத்தையும் சுமக்கும்.

மிசா காலத்திலும் , ராஜீவ் காந்தி மரணத்திலும் திமுக மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. அந்த நேரத்தைக் காட்டிலும் இப்போது மிக மோசமான ஒரு ஆபத்து இருக்கிறது. உங்களை குறி வைத்து இருக்கிறார்கள். நீங்கள் ஆட்சிபீடத்தில் ஏறக்கூடாது, எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறார்கள்.
உங்களை ஆட்சி பீடத்தில் அமர விடாமல் தடுத்து விட்டால் திமுகவையும், திராவிட இயக்கங்களை வேரறுத்து விட முடியும். திராவிட இயக்கத்தை வேரறுத்து விட்டால் சமூக நீதியை குழிதோண்டிப் புதைத்து விட முடியும் , பெரியாருடைய சிந்தனையை அழித்து ஒழித்து விட முடியும் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
திராவிட முன்னேற்ற கழகத்தை காப்பாற்றுவது , அண்ணன் தளபதியை முதல்வராக அமர வைப்பது ஆகிய இந்த இரண்டும் நமக்கு சவாலாக இருக்கிறது. என்றாலும் ஒட்டு மொத்தத் தமிழகத்தை காப்பாற்ற வேண்டியது நம் முன்னால் இருக்கிறது.இன்றைக்கு இந்தியா முழுவதும் மதவாத சக்திகளால் ஆதிக்கம் செலுத்த முடிகிறது, தமிழ்நாட்டை தவிர. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒருங்கிணைப்பு , தலைமை இங்கு இருக்கின்றது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் , இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து தலைமை தாங்கி நடத்தி வெற்றி கண்ட தலைவர் தளபதி. இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் தமிழகத்தில் போல நிகழ்த்தப்பட்டவில்லை. மற்ற மாநிலங்களிலும் இப்படி நிகழ்ந்திருந்தால் இந்த மதவெறியர்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது, தடுத்திருக்க முடியும்.
எனவே எல்லா மாநிலங்களுக்கும் தமிழ்நாடு வழிகாட்டுகிறது.பெரியார் காலத்திலிருந்தே, இனியும் தமிழ்நாடு தான் வழிகாட்ட வேண்டும் என்றால் அண்ணன் தளபதி அவர்களே! அது உங்கள் தோள்களில் தான் இருக்கிறது. அது மிகப் பெரும் சுமை தான். நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம். தலைவரின் வழியில் , பேராசிரியரின் வழியில் , பெரியார் எதைக் காக்க உறுதி எடுத்தாரோ அதற்காக உறுதி எடுப்போம் என்று திருமாவளவன் பேசினார்.