கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு சிறப்பு குழு அமைப்பு!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு சிறப்பு குழு அமைத்துள்ளது. தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த 18 அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்த குழு தினசரி ஆய்வு செய்யும் என கூறப்பட்டுள்ளது. சுகாதாரம், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்து, தகவல் தொழிநுட்பம், காவல்துறை, ரயில்வே, துறைமுகம் மற்றும் விமானம் போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 125பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவை தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது. கல்வி நிறுவனங்கள் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பூங்காக்கள், அருங்காட்சியகங்களை மார்ச் 31 வரை மூட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.