கர்தார்பூர் சிறப்பு வழித்தட திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சு வார்த்தை….!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே கர்தார்பூர் சிறப்பு வழித்தட திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தை இன்று சுமுகமாக நடைபெற்றது.   

சீக்கிய பக்தர்களுக்காக பஞ்சாப்பின் குருதாஸ்பூர் மாவட்டத்திலிருந்து குருத்வாரா தர்பார் சாஹிப் அமைந்துள்ள பாகிஸ்தானின் கர்தார்பூருக்கு சிறப்பு வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. சீக்கிய பக்தர்கள் விசா இன்றி சென்று வர இந்த சிறப்பு வழித்தடம் அமைக்கப்படுகிறது.

இந்த திட்டத்தை செயல்படுத்த ஏற்கனவே இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளது. இந்நிலையில் புல்வாமா தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து நடைபெற்ற அடுத்தடுத்த நிகழ்வுகளும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்தது. இருப்பினும் கூட கர்தார்பூர் சிறப்பு வழித்தடத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது என இரு தரப்பும் முடிவு செய்துள்ளது.

Image result for Pak-India talks on Kartarpur Corridor underway at Attari. PHOTO

இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் குழுவினரிடையே கர்தார்பூர் திட்டத்தை செயல்படுத்த தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அட்டாரி வாகா எல்லை அருகே அமைந்துள்ள அட்டாரியில்  இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் முதல்கட்ட பேச்சுவார்த்தை இணக்கமான சூழலில் இந்தியாவின் அட்டாரி பகுதியில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்தார்பூர் வழித்தடம் அமைப்பதற்கான திட்டங்கள் குறித்தும் குருத்வாரா சாஹிபிற்கு பக்தர்கள்  சென்று வருவதற்கான விரைவு  ஒப்பந்தம் குறித்தும்  விவாதிக்கப்பட்டதாகவும் பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தரப்பிலும் விரிவான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட பேச்சு வார்த்தையை பாகிஸ்தானின் வாகா பகுதியில் ஏப்ரல் 2ம்  தேதி நடத்துவதென முடிவு செய்யப்பட்டதாகவும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.