சுயதொழில் தொடங்க உதவுவதாக ரூ. 40 கோடி மோசடி – தந்தை – மகன் கைது…!!

சுயதொழில் தொடங்க உதவுவதாகக் கூறி தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரை ஏமாற்றி 40 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த மதுரையை சேர்ந்த தந்தை, மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் கீழக்குயில்குடியை  சேர்ந்த புவனேஸ், உஷா தம்பதியின் மகனான கிஷோர் என்பவர் சென்னையில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் டீலராக இருப்பதாகவும், மதுரையில் தான் தொடங்கும் கிளை நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ப்பதாகவும் கூறி திருநகரை சேர்ந்த ராஜ குரு என்பவரிடம் 95 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து தலைமறைவான கிஷோர் தன்னை தொழிலதிபர் என்று கூறி மீனாட்சி நகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்ய முயன்றுள்ளார்.

இதனை அறிந்த ராஜகுரு தனது பணத்தை கொடுக்குமாறு புவனேஷ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவனியாபுரம் காவல் துறையினர் இருவரையும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டபோது பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கிஷோரின் தந்தையான புவனேஷ் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 33 பேரிடம் சுய தொழில் தொடங்க உதவுவதாகக் கூறி 40 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் மீது நாகமலை புதுக்கோட்டை அண்ணாநகர் மதிச்சியம் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளதும், தந்தையின் மோசடிகளுக்கு கிஷோர் மூளையாக செயல்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *