”பெண்ணிடம் அத்து மீறல்”சஸ்பெண்ட் ஆன காவலர் …!!

கோவையில் குடிபோதையில் இளம்பெண்ணை துரத்தி சென்று வர்ணித்து அத்துமீறிய காவலரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் சேர்ந்த வன்னியன் கோவில் பகுதியில் ஒர்க் ஷாப் நடத்தி வருபவர் ரவிகுமார். இவரது மனைவி சரண்யா செவ்வாய்க்கிழமை மதியம் கீழநத்தம் பகுதியில் உள்ள தனது உறவினர்களை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அத்திப்பாளையம் பகுதியை அடுத்துள்ள டாஸ்மார்க் கடை அருகே இருந்து போலீஸ் உடை அணிந்த நபர் ஒருவர் பின் தொடர்ந்துள்ளார். காவலர் ஒருவர் பின்தொடர்ந்து வருவதை கண்டு பயந்த சரண்யா வேகமாக செல்ல முயன்றுள்ளார். அவரை முந்திச் சென்று வழிமறித்த காவலர் எங்கே செல்கிறீர்கள் என விசாரித்துள்ளார்.

மேலும் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் , உங்கள் கண் அழகாக இருக்கிறது என கூறி ஆபாசமாக பேசத் தொடங்கியுள்ளார். சரண்யா தான் கீழநத்தம் செல்வதாகவும் , அங்கு உறவினர்களை பார்க்க சென்று கொண்டிருப்பதாகவும் காவலரிடம் கூறிவிட்டு வேகமாக தனது வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். ஆனால் அந்த காவலர் விடாமல் சரண்யாவை பின் தொடர்ந்துள்ளார். இதனால் பீதி அடைந்த சரண்யா அத்திப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பேன்சி ஸ்டோருக்குள் சென்று அமர்ந்து கொண்டு தனது கணவருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார்.அங்கு சென்ற காவலர் தகாத வார்த்தையில் சரண்யாவிடம் பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து அத்தி பாளையத்தில் உள்ள பேன்சி ஸ்டோருக்கு சென்ற சரண்யாவின் கணவர் ரவிக்குமார் , அங்குள்ள பொது மக்களுடன் சேர்ந்து காவலரை சுற்றி வளைத்தனர். பொதுமக்கள் கூடியதை பார்த்த காவலர் அருகிலிருந்த கடைக்குள் சென்று அமர்ந்து கொண்டார். ஆனால் பொதுமக்கள் அவரை விடாமல் பிடித்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.பாதிக்கப்பட்ட பெண் தனக்கு ஏற்பட்ட அத்துமீறல் மற்றும் சீண்டல் குறித்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அப்போது போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த காவலரின் பெயர் பிரபாகரன் என்பதும் அவர் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது.

மேலும் இந்த காவலர் பெரியநாயக்கன்பாளையம் டிஎஸ்பி ஓட்டுநராக பணியாற்றியதும் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பிரபாகரனின் இருசக்கர வாகனத்தில் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் , உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அந்த காவலரை பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவிட்டார். மேலும் சரண்யா கொடுத்த புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீசார் காவலர் பிரபாகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.