நடிகர் சூர்யாவிற்கு இருக்கும் தைரியம் வேறு எந்த நடிகருக்கும் இல்லை என நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா நடத்தும் அகரம் பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சூர்யா புதிய கல்விக் கொள்கை குறித்து விமர்சனம் செய்தார். இவரது விமர்சனம் பலர் மத்தியில் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்று சர்ச்சைக்குரிய கருத்தாக மாறியது. தொடர்ந்து பேசப்பட்டு விவாதப் பொருளாக மாறிய இவ்விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்,

அரசியல் நோக்கத்தோடு எந்த கருத்தையும் கூறவில்லை என்றும், சாதாரண குடிமகனாக, சக மனிதனாக புதிய கல்விக் கொள்கை குறித்து எனது கருத்தை முன்வைத்தேன் என்றும் தெரிவித்தார். மேலும் பணக்காரர்கள் மட்டுமே பயிலக் கூடிய வகையில் கல்வி அமைந்தால் அது சூதாட்டத்திற்கு சமம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.சூர்யாவின் இக்கருத்திற்கு பல்வேறு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், நடிகர் சூர்யாவிற்கு இருக்கும் தைரியம் வேறு எந்த நடிகருக்கும் இல்லை என்றும்,பஞ்ச் டயலாக் படத்தில் பேசினால் மட்டும் போதாது வெளியில் வந்து பேச வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் சமகாலத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியாது எனில் படத்தில் புரட்சிகரமான கருத்து பேசுவது ஏற்புடையது அல்ல என்று தெரிவித்ததோடு, நடிகர் சூர்யா அனைவருக்கும் உதாரணமாக திகழ்கிறார் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.