சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹைதராபாத் அணி..!!

சென்னை அணிக்கு எதிரான போட்டியில்  ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது  

ஐ.பி.எல் 33 வது லீக் போட்டியில் சின்ன தல ரெய்னா தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையில்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. இப்போட்டி ஹைதராபாத் ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. தோனி விளையாடாததால் அவருக்கு பதில் சாம் பில்லிங்ஸ் விக்கெட் கீப்பராக நியமிக்கப்பட்டார். அதனால் சென்னை அணியின் கேப்டனாக ரெய்னா வழி நடத்துவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் டாஸ் வென்ற  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ரெய்னா பேட்டிங்கை  தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக பாப் டு பிளெசியும், சேன் வாட்சனும் களமிறங்கினர். இருவரும் நல்ல துவக்கம் கொடுத்தனர்.

அதன் பிறகு சேன் வாட்சன் 31 (29) ரன்களும், பாப் டு பிளெசி  45 (31) ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த  ரெய்னா 13, கேதார் ஜாதவ் 1, சாம் பில்லிங்ஸும்  0 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க இறுதியில்  அம்பத்தி ராயுடு 25* (21) ரன்களும் , ஜடேஜா 10* (20) ரன்களும் எடுத்தனர். இறுதியில் 20 ஓவர் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழந்து 132 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக ரஷித் கான் 2 விக்கெட்டுகளும், கலீல் அகமது, நதீம், விஜய் சங்கர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து ஹைதராபாத் அணியின் தொடக்க வீர்ர்களாக ஜானி பேர்ஸ்டோவும், டேவிட் வார்னரும் களமிறங்கினர். இருவரும் சிறப்பான  தொடக்கம் கொடுத்தனர். குறிப்பாக அதிரடியாக விளையாடிய வார்னர் 50 (25) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வில்லியம்சன் 3, விஜய் சங்கர் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு ஜானி பேர்ஸ்டோ பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றார்.  வெற்றியின் கடைசி கட்டத்தில் தீபக் ஹூடா 13 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்த பந்தில்  சிக்ஸர் மூலம்  ஜானி பேர்ஸ்டோ அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

இறுதியில் ஹைதராபாத் அணி 16.5 ஓவரில் 4 விக்கெட் இழந்து 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜானி பேர்ஸ்டோ 61* (44) ரன்களிலும், யூசுப் பதான் 0* ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். சென்னை அணியில்அதிகபட்சமாக இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளும், தீபக் சாஹர், கரண் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.