ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா…… SRH VS DC பலப்பரீட்சை…!!!

இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன  

2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 30 வது லீக் போட்டியில்   சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டி ஹைதராபாத் ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று இரவு  8 மணிக்கு தொடங்குகிறது.

முன்னாள் சாம்பியன் ஹைதராபாத் அணி இந்த சீசனில் இதுவரை 6 போட்டிகளில்  விளையாடி 3 வெற்றியும் 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 6 வது  உள்ளது. சன்ரைசர்ஸ் அணியில் காயம் காரணாமாக இந்த சீசனில் 1 போட்டியில் மட்டும் பங்கேற்ற கேன் வில்லியம்சன் உடல் தகுதி பெற்றதால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவார் என தெரிகிறது. அந்த அணி கடைசியாக விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை கண்டுள்ளது. எனவே ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்கும் விதமாக இன்றைய ஆட்டத்தில் வெல்லும் முனைப்பில் களமிறங்க உள்ளது.

டெல்லி அணி இந்த சீசனில் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 4  வெற்றியும், 3 தோல்வியுடன் 8 புள்ளிகள்  பெற்று புள்ளிப்பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி கடைசியாக விளையாடிய  2 போட்டிகளில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணியை வீழ்த்தியுள்ளதால் கூடுதல் வலுவுடன் காணப்படுகிறது. கடந்த கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஷிகர் தவான் 97 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற வைத்துள்ளார். அவர் பார்முக்கு திரும்பியிருப்பது அணிக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

இதற்க்கு முன்னதாக ஹைதராபத்துக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றுள்ளது. எனவே பதிலடி கொடுக்க டெல்லி அணி முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க ஹைதராபாத் அணியும், ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க டெல்லி அணியும் போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு  துளியளவும் பஞ்சமிருக்காது இரண்டு அணிகளும் இதுவரையில் 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் ஹைதராபாத் அணி 9 வெற்றியும், டெல்லி அணி 4 வெற்றியும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.