சென்னை மண்ணடி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் அதிகாலை 4 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை மண்ணடியில் இயங்கி வரும் பி.எஸ்.என்.எல். அலுவலக ஐந்து மாடிக் கட்டடத்தின் முதல் தளத்தில் அதிகாலை 4 மணிக்கு திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது. தகவல் அறிந்து 10 தீயணைப்பு வாகனங்களில் விரைந்துவந்த 80 தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் கணிப்பொறிகள், தொலை தொடர்பு இணைப்புகள், மற்றும் ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன.
கடுமையான புகை மூட்டம் காரணமாக ஏராளமான பெண்கள், குழந்தைகள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர். இதனால் போலீசார் அப்பகுதியில் உள்ள மக்களை வீடுகளை விட்டு வெளியேற்றினர். மேலும் வடக்கு கடற்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த தீ விபத்தானது மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தீ பரவாமல் இருக்க மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டது.