“சுபஸ்ரீ மரணம்”…. பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி..!!

 சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை குரோம்பேட்டையை  சேர்ந்தவர்  இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23). வீட்டிற்கு ஒரே செல்லப்பிள்ளையான இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் பணி முடிந்து   பள்ளிக்கரணை வழியாக சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத  சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். அந்த நேரத்தில் பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அதிமுக திமுக, பாமக அமமுக உள்ளிட்ட கட்சிகள் பேனர் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே இளம்பெண் உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில்  சென்னை பள்ளிக்கரணை அருகே சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.