“IT துறையின் வளர்ச்சிக்கு திமுக தான் காரணம்” பிரசார கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு…!!

IT துறையின் வளர்ச்சிக்கு திமுக தான் முக்கிய காரணம் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை போட்டியிடுகின்றார். இந்நிலையில் இவரை ஆதரித்து சோழிங்கநல்லூரில் உள்ள கண்ணகி நகரில் நேற்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது . இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் , திமுக மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மோடியின் திட்டங்கள் ‘வரும், ஆனா வராது’ என்ற நிலையில் தான் இருக்கிறது தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
இதில் பேசிய முக.ஸ்டாலின் , அனைவரும் படிக்க  வேண்டும் என்று சமச்சீர் கல்வியை கொண்டு வந்தவர் கருணாநிதி.  அந்த திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டு இருக்க காரணமாக    இருந்தவர் இந்த வேட்பாளரின் சகோதரர் தங்கம் தென்னரசு. இந்த தென்சென்னை தொகுதியில் தான் பேரறிஞர் அண்ணா, முரசொலி மாறன் ஆகியோர் வெற்றி பெற்றனர். தி.மு.க.வின் கோட்டையாக தென்சென்னை விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தலின் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமாக தென் சென்னை அமைய இருக்கிறது.

திமுக ஆட்சியில் சென்னை மக்கள் பயன்பெறும் வகையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை கொண்டுவந்தோம். இங்கு மோனோ ரெயில் திட்டம் தான் வேண்டும் என்று மறைந்த முதல்வர்  ஜெயலலிதா சொன்னார். ஆனால் இன்றைக்கு நிலை என்ன? பிரதமரை அழைத்து விழா நடத்துகிறீர்களே? இந்த திட்டம் யார் கொண்டுவந்த திட்டம்? நந்தம்பாக்கத்தில் இந்திய வர்த்தக மையம், கண்ணாடி தொழிற்சாலை உள்பட 100-க்கும் அதிகமான திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. டைடல் பார்க்கை உருவாக்கி கொடுத்தவர் கருணாநிதி தான். ஐ.டி. துறை வளர்ச்சிக்கு தி.மு.க. தான் முக்கிய காரணம் என்று ஸ்டாலின் பேசினார்.